92. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
இறைவன் சண்பகாரண்யேஸ்வரர், நாகேஸ்வரர்
இறைவி குன்றமுலைநாயகி (கிரிகுஜாம்பாள்), பிறையணி வாணுதலாள்
தீர்த்தம் நாக தீர்த்தம், சூர்ய புஷ்கரணி
தல விருட்சம் சண்பக மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருநாகேஸ்வரம், தமிழ்நாடு
வழிகாட்டி கும்பகோணத்துக்கு கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்துக்கு முந்தைய இரயில் நிலையம் திருநாகேஸ்வரம்.
தலச்சிறப்பு

Thirunageswaram Gopuramஒரு சமயம் நாகங்களுக்கு தலைவனான ஆதிசேஷன் இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவபெருமானை நோக்கி தவம் செய்து வந்தார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் காட்சி தந்த அருளினார். நாகங்களினால் ஏற்படும் தோஷங்களை நீக்கியருள ஆதிசேஷன் பிரார்த்தித்தார். நாகராஜன் வந்து வழிபட்ட தலமாதலால் 'நாகேஸ்வரம்' என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் 'சண்பகாரண்யேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். சண்பக மரங்கள் நிறைந்த வனத்தில் இருந்ததால் சுவாமிக்கு இப்பெயர். நாகராஜன் வழிபட்டதால் 'நாகேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகின்றார். மகாசிவராத்திரியின்போது சுவாமிக்கு இரண்டாம் கால பூஜையை ராகு பகவான் செய்வதாக ஐதீகம். அம்பிகை 'பிறையணி வாணுதலாள்' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

Thirunageswaram Moolavarமற்றொரு தனி சன்னதியில் 'கிரிகுஜாம்பாள்' என்னும் 'குன்றமுலைநாயகி' தரிசனம் தருகின்றாள். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது. இவருடன் கலைமகள், திருமகள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். பிருங்கி முனிவருக்காக மூன்று சக்திகளும் ஒன்றாக காட்சியளித்ததாக ஐதீகம். மேலும் இச்சன்னதியில் பால சாஸ்தா, சங்கநிதி, பதுமநிதி ஆகியாரும் உள்ளனர். இவர்களை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

Thirunageswaram Rahuநவக்கிரகங்களில் இத்தலம் இராகு பரிகாரத் தலம். இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் தனி சன்னதியில் தனது துணைவியர்களான நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் இராகு பகவான் மங்கள இராகுவாக மனித வடிவில் காட்சி தருகின்றார். ஆதலால் நாக தோஷம், இராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு. இவருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது அந்த பால் அவரது உடலின் மீது படும்போது நீலநிறமாக மாறும் அதிசயம் நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சி இங்கு விசேஷம்.

Thirunageswaram Sekkizharபெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான் இத்தலத்து சுவாமி மீது மிகுந்த பக்தி உடையவராக இருந்தார். அதனால் தனது ஊரான சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் சிவபெருமானுக்கு கோயில் ஒன்று எழுப்பி அதற்கு 'திருநாகேஸ்வரம்' என்று பெயரிட்டார். சேக்கிழார் எழுப்பிய மண்டபம் 'சேக்கிழார் மண்டபம்' எனும் பெயரில் உள்ளது. பிரகாரத்தில் சேக்கிழார், அவரது மனைவி, மகன் மற்றும் அவரது தம்பி ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.

விநாயகர், பார்வதி, மகாவிஷ்ணு, பிரம்மா, நந்திதேவர், தேவேந்திரன், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், கார்கோடகன், வாசுகி, கௌதம முனிவர், பராசரர், வசிஷ்டர், நளன், பாண்டவர், சம்புமாலி ஆகியோர் வழிபட்ட தலம். கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. ஏழு பெரிய கோபுரங்களை உடைய மிகப்பெரிய கோயில்.

இக்கோயில் அருகில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான 'உப்பிலியப்பன் கோயில்' என்னும் புகழ்பெற்ற பெருமாள் கோயில் உள்ளது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com